

கோவை: இ-சேவை மையங்கள் மூலம் வருவாய்த்துறைக்கு விண்ணப்பிக்கும் பல்வேறு சான்றிதழ்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ தொலைபேசி பதிவில், கோவை பெரியகடை வீதியை சேர்ந்த குமரன் கூறியிருப்பதாவது: எஸ்எஸ்எல்சி மற்றும் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மாணவர்கள் உயர் கல்வி கற்பதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வேண்டி இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
குறிப்பாக, நிரந்தர சாதிச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், வருவாய்த்துறையில் இந்த சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்காமல் காலம் தாழ்த்தும் நிலை உள்ளது.
உரிய ஆவணங்களை சரியாக அனுப்பியும்கூட காலதாமதம் ஆகிறது. ஆவணங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுபற்றி விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படுவதில்லை. விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள ஆன்லைனில் உள்ளீடு செய்தால், இரு வாரங்களுக்கு மேலாக கிராம நிர்வாக அலுவலர் நிலையிலேயே விண்ணப்பம் இருப்பது தெரியவருகிறது.
இதனால், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க மாவட்ட ஆட்சியர்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.