

10, 11-ம் வகுப்புக்கான துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 23) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்;
10, 11-ம் வகுப்புக்கான துணைத்தேர்வு ஜூன் 27 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் நாளை(மே 23) முதல்மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவர்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மையங்கள் மூலமாகவும் தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 30, 31-ம் தேதிகளில்தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
அதேபோல், 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பினால், மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் மே 24 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கட்டணம், துணைத்தேர்வுக்கான விரிவான கால அட்டவணை உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.