10-ம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

10-ம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
Updated on
1 min read

பெரம்பலூர்: விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மிகவும் பின் தங்கிய பெரம்பலூர் மாவட்டம் கல்வியிலும் பின் தங்கிய நிலையில் இருந்தது. 2011-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 29-ம் இடத்தை பிடித்தது. அப்போது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற தரேஸ் அஹமது, பள்ளிக் கல்வியில் பெரம்பலூர் மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் எனும் முனைப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

கற்கும் திறன் குறைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்குஇல்லம் தேடிச் சென்று கற்பிக்கும் தன்னார்வலர்களை உருவாக்கினார். அவர்களுக்கு பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியை பெற்று ஊதியம் வழங்க ஏற்பாடு செய்தார். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து ஊக்குவித்தார். இதன்பலனாக அடுத்த ஆண்டில் (2012-ம் ஆண்டு) வெளியான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 14-வது இடத்துக்கு முன்னேறியது.

அதன்பின், பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முன்னேறி முதல் 5 இடங்களுக்குள் வந்தது. பள்ளிக் கல்வியில் பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த தரேஷ் அஹமதுவுக்குப் பிறகு தொடர்ந்து பணியிலிருந்த ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர் முயற்சியால் பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த 2020-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.40 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 8-ம் இடத்தை பிடித்தது. 2021-ம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது. 2022 பெரம்பலூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97.95 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தது. இந்த ஆண்டு 97.59 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்தது.

இதேபோல, 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.15 தேர்ச்சி சதவீதம் பெற்று மாநிலத்தில் 2-ம் இடம் பிடித்த பெரம்பலூர் மாவட்டம், இந்த ஆண்டு 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டஆட்சியர் க.கற்பகம் கூறும்போது, ‘‘பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்துசிறப்பிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக பாடுபட்ட ஆசிரியர்கள், கல்வித் துறை அலுவலர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினரை மனதார பாராட்டுகிறேன். பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து கல்வியில் சிறப்புடன் திகழ அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இதற்கான ஒத்துழைப்பை மாவட்டநிர்வாகம் தொடர்ந்து வழங்கும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in