Published : 20 May 2023 06:37 AM
Last Updated : 20 May 2023 06:37 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 79.60 சதவீதம் மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
79.60 சதவீதம் தேர்ச்சி: 2022-2023 கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசுபொதுத்தேர்வில் 3 ஆயிரத்து 538 மாணவர்கள், 3 ஆயிரத்து 375 மாணவியர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 913 பேர் தேர்வுஎழுதினர். இதில் 2 ஆயிரத்து 622 மாணவர்கள், 2 ஆயிரத்து 881 மாணவியர்கள் எனமொத்தம் 5 ஆயிரத்து 503 பேர்(79.60 சதவீதம்) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.5 சதவீதம் அதிகமாகும்.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணிதத்தில் 2 மாணவியரும், அறிவியலில் ஒரு மாணவியும் நூற்றுக்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 50 பேர் 451-க்கு மேலும், 305 பேர் 401-லிருந்து 450 வரையும், 704 பேர் 351-லிருந்து 400 வரையும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
500-க்கு 493 மதிப்பெண்கள்: புல்லா அவென்யூ, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெரு மற்றும் பந்தர் கார்டன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500-க்கு 475 மதிப்பெண்களும் பெற்று 2-ம் இடத்தையும், கோயம்பேடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 500-க்கு 474 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ரங்கராஜபுரம் மற்றும் ஆயிரம் விளக்கு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கியுள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT