10-ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 26 முதல் மதிப்பெண் பட்டியல்: தமிழக அரசு

10-ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 26 முதல் மதிப்பெண் பட்டியல்: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை வரும் மே 26-ம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத்தேர்வுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மதிப்பெண் பட்டியலை 26.05.2023 (வெள்ளிக்கிழமை) முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரும் மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேற்வெழுதிய தேர்வு மையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டல் கோரும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 24.05.2023 முதல் 27.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Eervice Centres) வாயிலாகவும் 23.05.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் 27.05.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நாட்களில் விண்ணப்பிக்கத்தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05.2023 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 31.05.2023 (புதன்கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500, மேல்நிலை முதலாம் ஆண்டுத் தேர்விற்கு சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.1,000 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in