

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 19 முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க மே 17 வரை அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தட்கல் முறையிலான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கவிருந்தது.
இந்நிலையில், மாணவர்கள் நலன்கருதி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடும் மாணவர்கள் தட்கல் முறையில் மே 24 முதல் 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.