மாணவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி
மாணவருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: நரிக்குறவர் இன மாணவருக்கு சாதிச் சான்று வழங்கிய சிவகங்கை ஆட்சியர்

Published on

சிவகங்கை: ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியால், சிவகங்கையைச் சேர்ந்த நரிக்குறவர் இன மாணவருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பல தலைமுறையாக வசித்து வரும், அவர்களில் ஒருவர் கூட பிளஸ் 2 முடிக்கவில்லை. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் தங்கபாண்டி பிளஸ் 2 தேர்வு முடிவில் 438 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். பழமலைநகரில் முதன்முதலாக பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த தங்கபாண்டியை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உள்ளிட்டோர் பலரும் பாராட்டினர்.

இதுவரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருந்த நரிக்குறவர் சாதியை பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றி சமீபத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து தங்கபாண்டி அரசு கலை கல்லூரியில் சேர்வதற்காக மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் தனது சாதிச் சான்றை, பழங்குடியினர் பிரிவுக்கு மாற்ற விண்ணப்பித்தார். ஆனால், ஒரு வாரமாகியும் வருவாய்த் துறை அதிகாரிகள் சான்று வழங்காமல் அலைக்கழித்து வந்தனர்.

இதுகுறித்து இன்று (மே 18) இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மாணவர் தங்கப்பாண்டி, அவரது பெற்றோரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பழங்குடியினர் சாதிச் சான்றை வழங்கினார். கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர் பாலகுரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in