

கூடலூர்: கூடலூர் அரசு கல்லூரியில் இளநிலை கணித பாடப் பிரிவு நீக்கப்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் கடந்த 2003-ம் ஆண்டு இளநிலை கணித பாடப் பிரிவு தொடங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்ட கணித பாடப்பிரிவு, இந்தாண்டு திடீரென நீக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ,மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர்கள் கூறும்போது, ‘‘கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் கணித பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால், கணித பாடம் பயில விரும்பும் மாணவர்கள், கூடலூரில் இருந்து தினமும் 50 கி.மீ. பயணித்து உதகை அரசுக் கல்லூரியில் படிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் தினமும் கூடலூரில் இருந்து உதகைக்கு சென்று வர பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். இதனால், உதகையிலேயே தங்கி படிக்க வேண்டிய நிலையுள்ளதால், பணம் விரயமாகும். எனவே, கூடலூர் அரசுக் கல்லூரியில் நீக்கப்பட்ட கணித பாடப் பிரிவை மீண்டும் சேர்க்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் கீதாவிடம் கேட்டபோது ‘‘கல்லூரி முதல்வர் பரிந்துரையின் பேரிலேயே கணித பாடப் பிரிவு நீக்கப்பட்டது. அதற்கு மாற்றாக இளநிலை தாவரவியல் பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ‘‘கணித பாடப்பிரிவை நான் நீக்க சொல்லவில்லை. உயர் கல்வி அதிகாரிகளுக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளேன்’’ என்றார்.
எம்.பி. வலியுறுத்தல்: இவ்விவகாரம் தொடர்பாக, நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள், மக்கள் மத்தியில் அரசின் மீது அதிருப்தி நிலவுகிறது. தோட்டத்தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்களின் நலன் கருதி, அவர்களது குழந்தைகள் பயிலும் வகையில் கணித பாடப் பிரிவை மீண்டும் இந்த கல்வி ஆண்டிலேயே கொண்டு வந்து உதவ வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.