Last Updated : 15 May, 2023 06:24 AM

 

Published : 15 May 2023 06:24 AM
Last Updated : 15 May 2023 06:24 AM

முடங்கி கிடக்கும் நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்: மீண்டும் செயல்படுத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நடமாடும் ஆலோசனை மைய வாகனம்.

திருச்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உளவியல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனக் குழப்பம், பாலியல் பிரச்சினைகள், தேர்வு அச்சம் போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில், நடமாடும் ஆலோசனை மையம் ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2013-2014 கல்வியாண்டு முதல் இத்திட்டம் முதற்கட்டமாக ரூ.3 கோடி செலவில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு வேன் ஒதுக்கப்பட்டு, அதில் பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர், உதவியாளர் பணியில் நியமிக்கப்பட்டனர். இந்த திட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நடமாடும் ஆலோசனை மையமும் சுற்றியுள்ள 3 அல்லது 4 மாவட்டங்களை கவனிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதல் பணியாக அந்தந்த மண்டலத்திலுள்ள உளவியல் ஆலோசகர்கள் மாவட்டந்தோறும் பிரச்சினைக்குரிய பள்ளிகள், மதிப்பெண்ணில் பின்தங்கிய பள்ளிகள் குறித்த விவரங்களை சேகரித்து பட்டியலிட்டனர். பின்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உளவியல் அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறையில் தனியாகவோ அல்லது வேனிலோ அமர வைத்து ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.

அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக விரிவுப்படுத்த பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்தது.

இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டில் பரவிய கரோனா தொற்றால் நடமாடும் ஆலோசனை மையம் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் இந்த திட்டத்துக்காக சேர்க்கப்பட்ட உளவியல் ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வரவில்லை. இதன் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகங்களில் நடமாடும் ஆலோசனை மைய வாகனங்கள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார் கூறியது: அரசு பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைக்கு கவுன்சிலிங் அமைப்பு என்பது இல்லை. 2013-14 கல்வியாண்டில் கொண்டு வரப்பட்ட நடமாடும் உளவியல் ஆலோசனை மையம் பேருதவியாக இருந்தது. இதனால் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அவர்களிடையே தன்னம்பிக்கை ஏற்பட்டது. எனவே இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். மேலும் விடுமுறை நாட்களில் கிராமப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்றார்.

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம். சிவக்குமாரிடம் கேட்டபோது, ‘‘கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும். பின்னர் அவர்களது ஆலோசனையின் பேரில் இத்திட்டத்தை மீண்டும் செயல்முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x