

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வேலூர் மாவட்டம், காட்பாடி, சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி மாணவி ரேவா சுதர்சன்ராஜ் 500-க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-99, கணிதம்-99, ஆங்கிலம்-99 என மொத்த மதிப்பெண் 497 ஆகும்.
மேலும், பள்ளியில் 486 மதிப்பெண் பெற்று மாணவர்கள் ஆதித்ய சிங்க நரேந்திரன், விஜித் ஆகியோர் 2-ம் இடமும், ரக்க்ஷனா ரவிசங்கர் 485 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். 450-க்கு மேல் மதிப்பெண் பெற்று 44 பேர் சாதனை படைத்தனர்.
இவர் மாணவர்களை மகிஜா பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர்கள், துணை முதல்வர் எப்சிபா, தலைமை ஆசிரியை கீதா, இணைகல்வி ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவி ரேவா சுதர்சன் ராஜ் கூறும்போது, ``நாங்கள் வேலூரில் வசிக்கிறோம். என்னுடைய தந்தை டாக்டர் சுதர்சன்ராஜ், தாய் டாக்டர் பிரியம்வதா.நான் எல்.கே.ஜி. முதல் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளியில் படித்து வருகிறேன். பள்ளியில் படிக்கும்போது பாடத்தில் எந்த சந்தேகத்தைக் கேட்டாலும் அதனை உடனே ஆசிரியர்கள் நிவர்த்தி செய்து வைத்தனர். ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டாலே நாம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். நான் நீட்தேர்வு எழுதியுள்ளேன். டாக்டருக்கு படித்து பொதுமக் களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்'' என்று கூறினார்.
மாவட்டத்தில் முதலிடம்: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் காட்பாடி சிருஷ்டி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மாணவர்கள் வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். பள்ளியில் தேர்வு எழுதிய 152 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 500-க்கு 495 மதிப்பெண் பெற்று மாணவி விபாநேத்ரா முதலிடத்தையும், 492 மதிப்பெண் பெற்று மாணவி வைஷ்ணவி 2-ம் இடத்தையும், 491 மதிப்பெண் பெற்று மாணவர் சர்வேஷ் ஆனந்த், மாணவி ஜோஷிகா விஜயன் ஆகியோர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். 9 மாணவ, மாணவிகள் கணிதத்திலும், சமூக அறிவியலிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ மாணவிகளை சிருஷ்டி பள்ளிகளின் குழும தலைவரும், சிபிஎஸ்இ பள்ளி முதல்வருமான எம்.எஸ்.சரவணன் பூங்கொத்து, இனிப்பு வழங்கி பாராட்டினார்.