Published : 09 May 2023 06:15 AM
Last Updated : 09 May 2023 06:15 AM
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 86.86 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புலியூர் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2022-23 கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 2 ஆயிரத்து 626 மாணவர்கள், 3ஆயிரத்து 273 மாணவிகள் எனமொத்தம் 5 ஆயிரத்து 899 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 2 ஆயிரத்து 129 மாணவர்கள் (81.07%), 2 ஆயிரத்து 995 மாணவிகள் (91.50%) என மொத்தம்5 ஆயிரத்து 124 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.86 ஆகும். கடந்த ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.47 சதவீதமாக இருந்தது. இந்தஆண்டு 0.39 சதவீதம் அதிகமாகும்.
பாடவாரி தேர்ச்சி விகிதம்: பாட வாரியான தேர்ச்சி சதவீதத்தில் வேதியியல், தாவரவியல், வரலாறு ஆகிய பாடப் பிரிவுகளில்தலா ஒரு மாணவரும், வணிகக்கணிதம், புள்ளியியல், புவியியல்ஆகிய பாடப் பிரிவுகளில் தலா 2 பேரும், கணினி அறிவியல் பாடப் பிரிவில் 3, பொருளியல் பாடப்பிரிவில் 7, வணிகவியல் பாடப் பிரிவில் 20, கணக்கு பதிவியல் பாடப் பிரிவில் 25, கணினி பயன்பாடுகள் பாடப் பிரிவில் 9 என மொத்தம் 71 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மதிப்பெண்கள் அடிப்படையில் 52 மாணவர்கள் 551-க்கு மேல் 600 வரையும், 254 பேர் 501-லிருந்து 550 வரையும், 456 மாணவர்கள் 451-லிருந்து 500 வரையும் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
பெரம்பூர் பள்ளி முதலிடம்: மதிப்பெண்கள் அடிப்படையில் பெரம்பூரில், எம்.எச். சாலையில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மார்க்கெட் தெருமாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 60-க்கு 589 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600-க்கு 587 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில், புலியூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் பெற்று முதலிடத்தையும், சுப்பராயன் சென்னை மேல்நிலைப் பள்ளி 98.29சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், நெசப்பாக்கம் மேல்நிலைப் பள்ளி 97.89 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT