Published : 07 May 2023 03:44 AM
Last Updated : 07 May 2023 03:44 AM
சென்னை: தமிழ்நாடு பயோநெஸ்ட் கிளஸ்டர் மாநாடு தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆலோசகரும் நிர்வாக இயக்குநருமான அல்கா ஷர்மா தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, கிளீன் கிரீன் டெக், ரீஜெனரேட்டிவ் மெடிசின், பாயிண்ட் ஆஃப் கேர் நோயறிதல், மெட் டெக் சாதனங்கள், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள், மூலக்கூறு உயிரியல் கருவிகள் மற்றும் சிகிச்சைகள் ஆகிய துறைகளில் 10 தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த தயாரிப்பு வெளியீட்டு விழாவில் பிஐஆர்ஏசி பயோடெக் துறைக்கான வியூகக் கூட்டாண்மை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவின் தலைவர் மணீஷ் பேசும்போது, இந்திய உயிரியல் பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டத் தயாராக உள்ளது. தமிழ்நாடு கிளஸ்டரில் உள்ள 10 இன்குபேட்டர்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பலதரப்பட்ட பலத்தை ஒன்றிணைக்கின்றன. தமிழ்நாடு கிளஸ்டர் உறுப்பினர்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றார்.
சாஸ்த்ராவின் ஏபிஎல்இஎஸ்டி தலைமை நிர்வாக அதிகாரி எஸ். அனுராதா பேசும்போது, இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் கோல்டன் ஜுப்ளி மகளிர் பூங்கா, விஐடி, தானுவாஸ், சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், ஐஐடி மெட்ராஸ், சாஸ்த்ரா, பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரி மற்றும் எஸ்பிஎம்விவி திருப்பதி ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை என்றார்.
இவை ஸ்டார்ட் அப் இந்தியா விதை நிதி, பிக் கிராண்ட், நிதி-பிரயாஸ், நிதி-சீட் மற்றும் தமிழ்நாட்டின் இடிஐஐ போன்ற பல்வேறு மாநில, மத்திய அரசு திட்டங்களின் ஆதரவுடன் செயல்படுகின்றன.
தமிழ்நாடு பயோநெஸ்ட் கிளஸ்டரில் 10 பயோ இன்குபேட் மையங்கள் உள்ளன. அவை 80 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள ஒருங்கிணைந்த பகுதியாகும். இங்கு முதல் தலைமுறை தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தொழில் ஈடுபாடுகளை ஊக்குவிப்பதோடு, அணுகக்கூடிய வகையில் மலிவு மற்றும் அளவிடக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தமிழ்நாடு பயோநெஸ்ட் கிளஸ்டரின் தலைமை நிர்வாக அதிகாரி முத்து சிங்காரம் பேசும்போது, இந்த தொகுப்பில் 417 இன்குபேட்கள் உள்ளன. 190 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 107 ஸ்டார்ட் அப்கள் பெண்கள் தலைமையிலானவையாகும். 2022-23ம் ஆண்டில் இந்த தொகுப்புதான் 58 காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. இதுவரை 24 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு இன்குபேட்டர்கள் மூலம் சுமார் ரூ.124 கோடி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT