Published : 03 May 2023 04:25 AM
Last Updated : 03 May 2023 04:25 AM

திருவள்ளுவர் பல்கலை. பட்டமளிப்பு விழா அனுமதிக்கு ஆளுநர் மாளிகை தாமதத்தால் மாணவர்கள் கடும் பாதிப்பு

வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக 17-வது பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி அளிக்க ஆளுநர் மாளிகை தாமதம் செய்துவருவதாக கூறப்படுகிறது. இதனால், கடந்தாண்டு பட்டப் படிப்பு முடித்த சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்களை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

வேலூர் அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவள்ளுவர் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்தே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக் கின்றன. ஊழல் புகார் தொடங்கி தேர்வு குளறுபடிகள் வரை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

பட்டமளிப்பு விழா தாமதம்: திருவள்ளுவர் பல்கலையில் 2022-ம் ஆண்டுக்கான 17-வது பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. கடந்தாண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் படித்த சுமார் 40 ஆயிரம் பேருக்கு பட்டங்கள் வழங்க வேண்டியுள்ளது.

பொதுவாக தேர்வு முடிவு வெளியானதும் பட்டமளிப்பு விழா நடத்த சிறிது காலதாமதம் ஏற்படும் என்பதால் மாணவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ‘புரவிஷனல் சர்டிபிகேட்’ வழங்கப்படும். இந்த சான்றிதழ் 6 மாதங்கள் மட்டுமே தகுதியுடையதாக எடுத்துக்கொள்ளப்படும்.

புரவிஷனல் சர்டிபிகேட்டை வைத்து அடுத்தகட்ட மேற்படிப்புகளில் சேரலாம். திருவள்ளுவர் பல்கலையில் இருந்து வேறு ஒரு பல்கலையில் சேர்ந்தால் அல்லது மத்திய, மாநில அரசு பணிகளில் சேருவதற்கு புரவிஷனல் சான்றிதழ் பயன்படுத்தினாலும் அவர்கள் குறிப்பிடும் காலக்கெடுவுக்குள் பட்டம் பெற்றதற்கான சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்படிப்பு அல்லது வேலையில் தொடருவது சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடரும் குளறுபடிகள்: கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இளநிலை, முதுநிலை படிப்பு முடித்தவர்கள் தற்போது வரை பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா தாமதம் ஏற்படுவதற்கு ஆளுநர் மாளிகையில் நேரம் ஒதுக்காததே காரணம் என்றும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினரும் அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் கூறும்போது, ‘‘தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதுபோல் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கும் அனுமதி அளித்து விரைவில் பட்டங்கள் வழங்க வேண்டும்’’ என்றார்.

நிர்வாகம் செயல்படவில்லை: முன்னாள் பேராசிரியர் ஐ.இளங்கோவன் கூறும்போது, ‘‘திருவள்ளுவர் பல்கலையில் நிர்வாகம் முறையாக செயல்படவில்லை. பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் எதையும் செய்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை.

இவர்கள் தயாராக இருந்தால் ஆளுநர் நேரத்தை ஒதுக்கி பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி பட்டம் பெறும் மாணவர்களின் பட்டியல் அடங்கிய ‘மொராக்கோ’ புத்தகத்தில் (பட்டம் பெற்ற மாணவர்களின் வரிசை எண், தேர்வு எண், பாடப்பிரிவு உள்ளிட்டவை அடங்கிய பட்டியல்) மேடையிலேயே கையெழுத் திடுவார்’’ என்றார்

இது குறித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x