20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் | நீட் தேர்வு நகரங்கள் இணையதளத்தில் வெளியீடு: ஹால் டிக்கெட் விரைவில் பதிவேற்றம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வு நடக்கும் நகரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2023-24ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஓரிருதினங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை மூத்த இயக்குநர் (தேர்வுகள்) மருத்துவர் சாதனா பிரஷார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியாவில் 499 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு மே 7-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகரம் குறித்த விவரங்களை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.

சரிபார்க்கவோ, பதிவிறக்கமோ செய்ய முடியாதவர்கள் 011-40759000 என்ற எண்ணிலோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். நீட் தேர்வுதொடர்பான தகவல்கள் இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in