

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடமாடும் நூலகச் சேவை நாளை தொடங்கப்படுகிறது.
அம்மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், நடமாடும் நூலகம் கிராமப் பகுதிகளுக்கு மே 2-ம் தேதி முதல் செல்ல உள்ளன.
இந்த நூலகத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவான வழிகாட்டி புத்தகங்கள், மாணவ,மாணவிகள் பொது அறிவு குறித்த புத்தகங்கள், தொழில்துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகள், வரலாறு, பண்பாடு, பெண்களுக்கான சுய முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்க உதவும் புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
நடமாடும் நூலகம் மாணவ, மாணவிகள் வாகனத்திலேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8610173901, 7010838609, 9894065655 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.