

அரூர்: கடத்தூர் அருகே கோம்பை கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி தொடங்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒபிளிநாயக்கன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கோம்பை கிராமம். மூக்கனூர் மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதியிலுள்ள குழந்தைகள் 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முத்தனூர் அல்லது மதனாபுரி அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் வழியில் இரு வேறு இடங்களில் காட்டாறு குறுக்கிடுகிறது. மழைக் காலங்களில் காட்டாற்றில் திடீரென வெள்ளம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆற்றைக் கடந்து மறுபுறம் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
இயற்கை இடையூறிலிருந்து தப்பிக்கும் வகையில் கோம்பை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக ஏற்கெனவே 26 சென்ட் நிலம் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர தற்காலிகமாக பள்ளி செயல்படவும் கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.
சுமார் 70 மாணவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயில வாய்ப்புள்ள இப்பகுதியில் உடனடியாக வரும் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.