

ராமநாதபுரம்: தேசிய அளவிலான வழக்காடுதல் போட்டியில் முதலிடம் பெற்ற ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
திருச்சியில், தேசிய அளவிலான அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வழக்காடுதல் போட்டி கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி மாணவிகள் ரம்யா, காவ்யதர்ஷினி, பொன் ராஜம் ஆகியோர் கொண்ட குழு பங்கேற்றது. இக்குழுவினர், தமிழ் குற்றவியல் வழக்காடுதல் போட்டியில் முதலிடம் பெற்றனர்.
இம்மாணவிகள், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை ஆட்சியர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் கலந்துகொண்டார். வெற்றி பெற்ற மாணவிகள் கூறுகையில், அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு தேசிய அளவிலான தமிழ் குற்றவியல் வழக்காடுதல் போட்டியில், மாநில அளவில் 14 கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், நாங்கள் முதலிடம் பிடித்துள்ளோம் என்றனர்.