

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள கூட்டு கண்டுபிடிப்பு மையம் மற்றும் இன்குபேஷன் நிறுவனமான ‘டெக்ஸோ சொல்யூஷன்ஸ்’ உள்ளிட்டவற்றின் கூட்டு முயற்சியால் ‘ஸ்மார்ட் பயோ சிம்’ என்ற புதிய கருவியை மாணவ, மாணவிகள் உருவாக்கியுள்ளனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் எஸ்என்ஆர் சன்ஸ் சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணஸ்வாமி பங்கேற்று கருவியை அறிமுகம் செய்து வைத்தார். மருத்துவமனைகளில் உள்ள நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் ஊழியர்கள், நோயாளிகளுக்கு விரைந்து சேவை செய்யும் வகையில் இக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவி மிகவும் பயன்தரும் என ‘ஐசியு’ பிரிவு தலைவரும், மருத்துவருமான பி.ராம்குமார், இருப்பிட மருத்துவ அதிகாரியும், மருத்துவருமான அழகப்பன், நர்சிங் துறை தலைவரும், மருத்துவருமான கற்பகம் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
பேராசிரியர்கள் திவ்யலட்சுமி, திருக்குறள்கனி ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில் இக்கருவியை உருவாக்கிய மாணவர்கள் அம்ரிதா, ஷெவேணி அருண், லோகபிரகாஷ், யோகிதா உள்ளிட்டோரை நிர்வாக அறங்காவலர் பாராட்டியதோடு, இக்கண்டுபிடிப்பை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.