

புதுச்சேரி: புதுச்சேரியில் 121 அரசுப் பள்ளி களில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவர ஒப்புதல் வழங்குமாறு மத்திய கல்வி அமைச்சரிடம் கோரியுள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மடுகரை எம்.ஆர்.சுப்பராயக் கவுண்டர் அரசு தொடக்கப் பள்ளியின் 70-ம் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு ஆண்டு மலரை வெளியிட்டு, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம். அனைத்து தரப்பு மக்களும் வளர வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து தரமான கல்வியை கொடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்தவர்களாக, நல்ல கல்வியாளர்களாக உருவாக்க அரசு அனைத்து நடவடிக் கைகளையும் எடுக்கும்.
புதுச்சேரியில் 121 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டுவர, ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி ஒப்புதல் வழங்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கோரியுள்ளோம். நிச்சயமாக அனுமதி கிடைக்கும். 2 முறை மத்திய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன். அவரும் ஒப்புதல் அளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.