Published : 12 Sep 2017 10:46 AM
Last Updated : 12 Sep 2017 10:46 AM

கல்வியே செல்வம்: அரவணைக்கும் நல்லாசிரியர்கள்!

ற்பித்தல் முறையில் புதுமை, தொழில்நுட்ப வசதி கூட்டப்பட்ட உயர்தரப் பயிற்சி, அனுபவக் கல்வித்திட்டம், ஒவ்வோர் ஆண்டும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு, மனிதநேயக் கல்வி, சுற்றுச்சூழல் குறித்த ஆக்கபூர்வச் செயல்பாடுகள், பல ஆண்டுகளாக 100 சதவீதம் மாணவர் தேர்ச்சி போன்ற பன்முக ஆற்றலைக் கல்வி முறையில் வெளிப்படுத்தும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் அதே நாளில்தான் இவ்விருதும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் 22 பேர் கடந்த வாரம் நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட மாற்றங்கள் என்ன?

விவாதக் களமான நூலகம்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தனியார் பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்புறைகள் மிக முக்கியக் காரணமாக உள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பயில ஏதுவாக ‘ஸ்மார்ட்’ வகுப்பறை வசதியை கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைத்திருக்கிறார் ஆசிரியர் ஏ.மோகனன்.

“சாமானியர்களின் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பை அறிமுகப்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். அதே நேரத்தில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்து வகுப்பறையை மட்டும் நவீனப்படுத்திவிட்டால் போதாது. வாசிப்பின் மூலம் மட்டுமே புத்தி கூர்மையடையும். அதனால் 7,000 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தோம். புத்தகங்கள் மீதான பேரன்பு வாழ்க்கை முழுவதும் தொடர, அன்றாடம் எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் பிரத்யேகமாக ஒரு மணி நேரத்தை நூலக வாசிப்புக்காக ஒதுக்குகிறார்கள். நாளிதழ், புத்தக வாசிப்பு தொடர்பாக விவாதங்களும் மாணவர்களிடையே நடத்துகிறோம். இதன் பலனாகக் கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 500 மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள்” என்கிறார் மோகனன்.

திறனறிவுத் தேர்வு வெற்றி

எட்டாம் வகுப்பு முடித்ததும் திறனறித் தேர்வு எழுதப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களில் பெரம்பலூர் மாவட்டம் பெரியவெண்மணி சிதம்பரம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி) மாணவர்களுக்குத் தனி இடம் உண்டு எனப் பெருமிதம் கொள்கிறார் அப்பள்ளித் தலைமை ஆசிரியை பி.வாசுகி. இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்தக் குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை கிடைக்கிறது. இவருடைய கணவர் திருநாவுக்கரசரும் 2012-ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். அந்த வகையில் இவர்கள் நல்லாசிரியர் தம்பதி.

மாடித் தோட்டப் பள்ளி

கடந்த 8 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை இடையன்காட்டுவலசு நகராட்சி உயர்நிலைப் பள்ளி பெற அரும்பாடுபட்டவர் ஆசிரியர் டி.சிவக்குமார்.

“கடந்த 3 ஆண்டுகளாக ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை மாநகராட்சி நிதி உதவியுடன் நடத்துகிறோம். மாணவர்களுக்குப் பாடங்களைக் காட்சிப்படுத்தும்போது, கவனச்சிதறல் குறைகிறது. பாடங்களை மனம் எளிதில் ஏற்கிறது. பெற்றோர் வீட்டில் கொடுக்கும் அரவணைப்பை பள்ளியிலும் குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். தோழமையோடு ஆசிரியர்கள் பழகுவதும், பாடங்களின் மீது விருப்பம் ஏற்பட மிக முக்கியக் காரணம். அந்த அரவணைப்பும் அனுசரணையும் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

பள்ளியில் மாடித்தோட்டம் அமைத்து வெண்டை, செடி முருங்கை, முள்ளங்கி, கீரை வகைகளைப் பயிரிட்டு அவற்றை மதிய சத்துணவுக்குப் பயன்படுத்துகிறோம்” என்கிறார் சிவக்குமார்.

நேரடி அனுபவக் கல்வி

ஏட்டில் உள்ள கல்வியை மாணவர்கள் மனதில் ஏற்றுவதுதான், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். திணிக்கப்படும் எதுவும் மனதுக்கும் உடலுக்கும் தீங்குதான். இதை மனதில்கொண்டு கற்பித்தல் முறையைச் சீரமைத்திருக்கிறார் ஈரோடு சலங்கைப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஏ.வாசுகி.

“பாடப் புத்தகத்தில் படிப்பதைப் புரிந்துகொள்ள நேரடி அனுபவம் கைகொடுக்கும். அதனால் மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், தபால் நிலைய அலுவலர், துப்புரவுத் தொழிலாளர் என வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களை மாணவர்கள் நேரில் சந்திக்க வைத்து, கலந்துரையாட வைக்கிறோம். இதன்மூலம் வெவ்வேறு துறை சார்ந்த அனுபவங்களையும் வாழ்க்கை முறையையும் சமூக அக்கறையோடு புரிந்துகொள்ளும் வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறோம். சாலை விதிகளைப் பின்பற்றுவது, வாகனம் ஓட்டும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வங்கிக்குச் சென்று பணம் செலுத்துவது- பணத்தைத் திருப்பி எடுப்பது போன்றவற்றை சம்பந்தப்பட்ட இடங்களுக்கே அழைத்துச்சென்று கற்றுத் தருகிறோம்” என்கிறார் வாசுகி.

உயர்ந்து நிற்கும் கிராமப் பள்ளி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியற்ற மிகவும் பின்தங்கிய கிராமம் கவரப்பட்டி. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிவக்குமாரும், விருது பெற்றிருக்கிறார்.

“மாணவர் தேர்ச்சி விகிதம், பள்ளியின் சுற்றுச்சூழலைச் சோலையாக மாற்றி 400 மரங்கள் நட்டு வளர்த்து வருவது, கிராமப்புறக் குழந்தைகளுக்காகத் தனியார் நிறுவனத்திடம் இருந்து கணினிகள் பெற்றுத் தரமான பயிற்சி வழங்குவது எனப் பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளோம். கிராமப்புறப் பள்ளி என எங்களை யாரும் இன்றைக்கு நிராகரிக்க இயலாத அளவுக்குப் பள்ளியை வளர்த்துள்ளோம்” என்றார்.

அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப் பாடுபட்டது, பள்ளியின் சூழலை மாணவர்களுக்கு உகந்த வகையில் மாற்றியது என மாணவர் சமூகத்தின் பல்வேறு சேவைகளுக்காக இந்த விருதுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பள்ளிச் சூழலைக் கொண்டாட்டமாக மாற்றி, மாணவர்கள் மனதில் மாற்றத்தை விதைத்து வருகிறார்கள் இந்த நல்லாசிரியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x