

குன்னூர்: இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, யுனெஸ்கோ அமைப்பின் கீழ் செயல்படும் உலக இளைஞர் கலைநிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது. ‘என் நாட்டின் கதை மற்றும் புராணங்கள்' எனும் தலைப்பில் கடந்த ஜனவரி மாதம் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச ஓவியப் போட்டியில், 70 நாடுகளை சேர்ந்த 3,823 பேர் 'ஆன்லைனில்' பதிவு செய்து, ஓவியப் படைப்புகளை அனுப்பி வைத்தனர்.
இதில், கடந்த பிப்ரவரி மாதம் 20 பேர் கொண்ட நடுவர் குழு, சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தது. அதில், இந்தியாவில் இருந்து 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்ற குன்னுார் மாணவி பிலோமினா சிமியின் (17) என்பவரின் ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இவருக்கு ஜூன் 3-ம் தேதி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.