

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி முடிவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகத்தில் 9 லட்சத்து 22,725 மாணவ, மாணவிகள், புதுச்சேரியில் 15,566 பேர், தனித் தேர்வர்கள் 37,798 பேர் என மொத்தம் 9 லட்சத்து 76,089 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ்ப் பாட தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருந்தாலும், பள்ளிகளுக்கு 8 மணி முதலே மாணவ, மாணவிகள் வரத்தொடங்கினர். அவர்களுக்கு ஆசிரியர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அமைச்சர் ஆய்வு: சென்னை லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேர்வுக்கான ஏற்பாட்டை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டார். அப்போது தேர்வு எழுத இருந்த மாணவிகளிடம் ‘தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள், எதற்கும் பயப்பட வேண்டாம்' என்று அறிவுரை வழங்கினார். தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப் பாட தேர்வுகளை சுமார்50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவில்லை. தேர்வுத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தால் சர்ச்சை கிளம்பியது. அதனால், பத்தாம் வகுப்பு தேர்வை எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற விவரத்தை அரசு தேர்வுத் துறை வெளியிடவில்லை.