

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்பட்ட அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயின்று முதலிடம் பிடித்த இளைஞரை கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் கவுரவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கும் மற்றும்தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பின் மூலமாக பயின்ற போட்டி தேர்வர்களில் டிஎன்பிஎஸ்சி நடத்திய 2022-2023-ம்ஆண்டு குரூப்-4 தேர்வில் 10 நபர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், பழங்குடியினர் பிரிவில் தமிழக அளவில் வெங்கட்ராமன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
அதேபோன்று, தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் 7 நபர்கள் இந்த பயிற்சிமையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற நபர்களை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அழைத்து, பாராட்டிக் கவுரவித்தார்.