

சென்னை: அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த 27 வயதுக்கு உட்பட்ட 25 தேர்வர்களுக்கு 2024-ம்ஆண்டுக்கான ஐஏஎஸ் பணிகள் உள்ளிட்ட இந்தியக் குடிமைப்பணித் தேர்வுக்கு கட்டணமற்ற தமிழ்வழிப் பயிற்சிக்கான சேர்க்கை வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகின்றது.
இந்தியக் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கு வழங்கப்படுகின்ற 12 மாத கால இப்பயிற்சியில் தேவையான அடிப்படைப் பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளும் வழங்கப்படும்.
வாரந்தோறும் முதன்மைத் தேர்வுக்கான மாதிரித் தேர்வும், பிரத்யேக வகுப்புகளும் வெற்றியாளர்களின் வழிகாட்டுதல் சந்திப்பும் இப்பயிற்சியில் அடங்கும். முறையான திட்டமிடுதலுடனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்வழியில் எழுதும் தேர்வர்களை இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெற வைப்பதற்கான உத்திகளுடனும் பயிற்சி நடைபெறும்.
10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்வர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலும், அகாடமி நுழைவுத் தேர்வின் அடிப்படையிலும் பயிற்சிக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இளநிலை பட்டப் படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் தங்களது 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப் படிப்புமதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் சாதிச் சான்றிதழ் நகலையும் இணைத்து அகாடமிக்கு 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை,அண்ணாநகர் என்ற முகவரியில்நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம். அல்லது aarvamiasacademy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக வரும் ஏப்.13-க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 7448814441, 9150466341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.