

மதுரை: காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகள் அவ்வப்போது, புதிய பாடப் பிரிவுகளை தொடங்குகின்றன. இதற்கு காமராசர் பல்கலைகழகத்தில் முறையைான அனுமதி பெறவேண்டும். புதிய பாடப் பிரிவு தொடங்கும் கல்லூரிகளில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் ஆய்வுக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்கும். இதுவே நடைமுறையில் உள்ளது. தற்போது, புதிய பாடப்பிரிவு தொடங்க விண்ணப்பித்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க அவசரம் காட்டுவதாக காமராசர் பல்கலைக்கழக பெண் ஊழியர் உட்பட ஓரிருவர் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து புகார் எழுப்பும் பல்கலைகழக அலுவலர்கள் கூறியது: ”ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்திற்குள் புதிய பாடப்பிரிவு அனுமதிக்கென சம்பந்தப்பட்ட கல்லூரிகள் விண்ணப்பிப்பது வழக்கம். மார்ச்சில் விண்ணப்பித்த கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் அடங்கிய ஆய்வுக்குழு சென்று புதிய பாடப்பிரிவுக்கு தேவையான வகுப்பறைகள், ஆய்வகம், புத்தகங்கள், ஆசிரியர்கள் நியமனம் போன்ற கட்டமைப்பு விவரங்களை சேகரித்து சரிபார்க்கும். இதன்பின், புதிய பாடப் பிரிவுக்கு அனுமதி வழங்கலாமா, வேண்டாமா என அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.
இதற்கான சிறப்புக்கு குழுவால் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு பிறகு சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்படும். இருப்பினும், தற்போது பல்கலை. பெண் ஊழியர் ஒருவர், புதியப் பாடப் பிரிவுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்த கல்லூரி நிர்வாகத்திற்கு அனுமதிக்கான ஆய்வறிக்கையின் சாதக, பாதக தகவல்களை பகிருவதாகவும், பாதமாக இருந்தால் பல்கலை.யில் குறிப்பிட்ட அதிகார நபர்களை தொடர்புகொள்ள வலியுறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய பாடப் பிரிவுக்கான அறிக்கை அனுமதி கிடைக்கும் வரை ரகசியம் காக்க வேண்டும் என்ற போதிலும், பெண் ஊழியர் உள்ளிட்ட ஓரிருவர் கல்லூரிகளை தொடர்பு கொள்வது சர்ச்சையை ஏற்படுத்துகிறது. ஆய்வுக்குழுவின் சீல் வைத்த அறிக்கையை பிரிப்பது தவறானது. கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் நியமனம் தயாராகாத நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஆய்வை முடிக்கச் செல்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இது உண்மைதானா என பல்கலை. நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
புதிய பாடப் பிரிவுக்கான அனுமதி வழங்கும் துறை சார்ந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”புதிய பாடப்பிரிவு அனுமதி பெற விரும்பும் கல்லூரிகள் முறையாக விண்ணப்பித்தபின், பல்கல. நிர்வாக உத்தரவின் பேரில், ஆய்வுக் குழு உரிய கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யும். இதற்கான சிறப்புக் குழு மற்றும் சிண்டிக்கேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இது கற்பனையான தகவல். தவறு நடக்க வாய்ப்பே இல்லை” என்றார்.