

சென்னை: தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் முறையாக தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, அனைத்துவித மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு தரைதளத்தில் மட்டுமே தேர்வறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதுதவிர, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். செவித்திறன் குறைபாடுடைய மற்றும் டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) பாதிப்புற்ற மாற்றுத் திறனாளி தேர்வர்களின் முதன்மை விடைத்தாளின் முதல் பக்கத்தில் சிவப்பு நிற மையால் அதன் விவரங்களை குறிப்பிட வேண்டும். மேலும், தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.