

புதுடெல்லி: ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் கிளைகளை வெளிநாடுகளில் திறக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. புதிய கல்விக் கொள்கையின்படி இந்தியக் கல்வியை சர்வதேசமயமாக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை 2020-ல் அறிமுகமானது.இதன் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்தியக் கல்வியை சர்வதேசமயமாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் கிளைகளை இந்தியாவில் அமைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. இதேவகையில், இந்திய கல்வி நிலையங்களின் கிளைகளும் வெளிநாடுகளில் அமைக்கப்பட உள்ளன. இதன் தொடக்கமாக இந்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி ஆகியவற்றின் கிளைகளை வெளிநாடுகளில் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வித் துறை வட்டாரம் கூறும்போது, “இந்தியாவில் சுமார் ஆயிரம் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பலனை பொறுத்து, இப்பட்டியலில் அடுத்தடுத்த கல்வி நிறுவனங்களும் சேர்க்கப்படும். இக்கிளைகள் வெளிநாடுகளில் அமைக்கப்படுவதால் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இதை செயல்படுத்த உள்ளோம். இதற்காகத் தயாராகி வரும் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை ஆகியவற்றிலும் கோரிக்கையின் அடிப்படையில் கிளைகள் தொடங்க திட்டமிடப்படுகிறது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் தரத்துடன் அவற்றின் கட்டணத்திற்கு போட்டியாக இக்கிளைகளில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படும். அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் இத்திட்டத்தால் இந்தியக் கல்வி நிறுவனங்களின் புகழ் வெளிநாடுகளிலும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது.