Published : 22 Mar 2023 06:26 PM
Last Updated : 22 Mar 2023 06:26 PM

25 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லாமல் தவிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள்: விக்கிரமங்கலம் கள்ளர் பள்ளிக்கு விடிவு எப்போது?

மதுரை: விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி கலைப்பிரிவு மாணவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி தேர்வெழுதி வருகின்றனர். தற்போதைய பட்ஜெட்டில் அறிவித்ததுபோல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையிலிருந்து பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் வந்த பின்னராவது விடியல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்குட்பட்ட அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து வருகின்றனர். உயர் நிலைப்பள்ளியாக இருந்தது 1997-98-ம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து தற்போதுவரை கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 கலைப் பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு வரலாறு, கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனாலேயே கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இன்றி தேர்வு எழுதி வருகின்றனர்.

கால் நூற்றாண்டாககண்டுகொள்ளப்படாத விக்கிரமங்கலம் மேல்நிலைப் பள்ளிக்கு, தற்போது தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளியை பள்ளிக்கல்வித்துறையின்கீழ் வந்த கொண்டு வந்த பின்னராவது ஆசிரியர்கள் நியமித்து தமிழக அரசு விடியல் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவர்கள் உள்ளனர்.

இது குறித்து விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கூறியதாவது: “விக்கிரமங்கலம் கள்ளர் மேல்நிலைப் பள்ளியாக 1997-98-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல்லில் உள்ள கள்ளர் பள்ளிகளில் விக்கிரமங்கலம் பள்ளி மாணவர்கள் பல சாதனைகள் படைத்து வருகின்றன. அத்தகைய பள்ளிக்கு அன்றிலிருந்து இன்றுவரை கலைப்பிரிவுக்கென வரலாறு, கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஆண்டுதோறும் கலைப்பிரிவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலைப்பிரிவில் விரும்பி படிக்கின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் படித்துவருகின்றனர். இதனால் மாணவர்கள் முழுமையாக கற்றுத் தேராமல் தோல்வியைத் தழுவும் நிலையே நீடிக்கிறது. மேலும் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மேல்நிலைக் கல்வியை கைவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். படிக்க ஆர்வமுள்ளவர்கள் பணம் கொடுத்து வெளியில் 'டியூசன்' படிக்கும் நிலையில் உள்ளனர். இதுவரை பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலத்துறையின்கீழ் இருந்ததால் கண்டுகொள்ளப்படவில்லை.

தற்போது திமுக அரசின் பட்ஜெட் தாக்கலின்போது வெவ்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இனிமேலாவது கால் நூற்றாண்டாக ஆசிரியர்களுக்காக காத்திருக்கும் விக்கிரமங்கலம் கள்ளர் பள்ளி மாணவர்களுக்கு விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்காக கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன் சட்டப்பேரவையில் குரல் கொடுக்க வேண்டும்” என்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x