

சென்னை: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 5.27 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 15 வயதுக்கு மேலான எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்றுவிப்பதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 4.8 லட்சம் பேருக்கு பயிற்சிஅளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைவிட கூடுதலாக தமிழகம் முழுவதும் மொத்தம் 28,848 மையங்களில் 5 லட்சத்து 28,001 பேருக்கு தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி தரப்பட்டது.
இதையடுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு அடைப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தி சான்றிதழ் தர முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேர்வு அவரவர் சார்ந்த கற்போர் மையங்களில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 27,414 பேர் எழுதினர். தேர்வில் 587 பேர் பங்கேற்கவில்லை. வரும் கல்வியாண்டில் ஜூன் முதலே 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இணைத்து கல்வி கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.