

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கி மார்ச் 25-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலக்கட்டங்களில் இலக்கியம், கவின்கலை,சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன.
இதற்கிடையே கரோனா தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மன்றங்கள் செயல்படாமல் இருந்தன. இதையடுத்து இவற்றை புதுப்பித்து சிறப்பாக செயல்பட பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வகையில் நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளி 6 முதல்9-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் மன்றச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் இலக்கிய மன்றம், படங்கள் திரையிடுதல் போன்ற நிகழ்ச்சிகளும், போட்டிகளும் மாதந்தோறும்நடத்தப்பட்டன. அதன்படி வானவில் மன்றப் போட்டிகள் பள்ளி, ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில்நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் மார்ச்20 முதல் 25 வரை நடைபெறுகிறது.
இதையடுத்து மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் தலா 4 மாணவர்கள் வீதம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த போட்டியில் மாணவர்களை ஒருங்கிணைப்பதற்காக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்புஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான வழிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நல்முறையில் நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.