

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் விக்கி ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எண்ணாயிரம் தொடக்கப் பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் பயிலுகின்றனர். இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகம் முழுவதும் திறந்த நிலையிலேயே உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சிதிலமடைந்து இருப்பதால் மாணவர்கள் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைக்கு செல்லும் நிலை உள்ளது.
இப்பள்ளியில் பயிலும் மாண வர்கள் காலை 8.30 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து, வகுப்பறையை சுத்தம் செய்து, கொடிக் கம்பத்தில் தேசியக்கொடியை கட்டி ஆயத்தமாக இருக்கின்றனர். பள்ளித் திறப்பு நேரமான காலை 9.15 மணி ஆகியும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று ஆசிரியர் வரவில்லையா? எனக் கேட்டதற்கு, இதற்குப் பிறகு தான் வருவார்கள் என மாணவர்கள் பதிலளித்தனர்.
இதுதொடர்பாக பள்ளி அருகில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தபோது, “எசாலம் கிராமத்திற்கு வந்து செல்லும் பேருந்து தாமதமாகத்தான் வரும். அதனால் ஆசிரியர் வருவதற்கு நேரமாகிறது. பள்ளிக்கு சுற்றுச்சு வர் இல்லாததால் இரவு நேரங் களில் பள்ளி வளாகத்தை மதுகுடிப்பதற்கு சிலர் பயன்படுத்து கின்றனர். எனவே அதற்கு தீர்வு காண முயலுங்கள்” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசரிடம் கேட்டபோது, “இது தொடர்பாக விசாரிக்கிறேன்” எனக் கூறினார். மாணவர்கள் காலை 8.30 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.