

சென்னை: புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 28,848 மையங்களில் 5.28 லட்சம் பேருக்கு தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக பாடநூல், பயிற்சி கையேடும் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து பயிற்சி பெறுபவர்களுக்கு அடைப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதற்கான தேர்வு அவரவர் சார்ந்த கற்போர் மையங்களில் இன்று (மார்ச் 19) நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கற்போர் மையங்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை இயக்குநர் பெ.குப்புசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுத்தறிவு பெற வேண்டியவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.