பள்ளிக் கல்வி - யாருக்கு இல்லை பொறுப்பு..?

பள்ளிக் கல்வி - யாருக்கு இல்லை பொறுப்பு..?
Updated on
3 min read

உலகம் முழுக்க எல்லாரையும் பாதித்த கரோனா பெருந்தொற்று ஒரு சிலரை எதுவும் செய்யாது என்று நாமாகத் தீர்மானித்துக் கொண்டோம். மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் வரிசையில், பள்ளி ஆசிரியர்கள் இப்படித்தான் நடத்தப்பட்டார்கள். இவர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தன; ஆனால் சரிவர கவனிக்கப் படவில்லை. ‘பெருந்தொற்று காலத்திலும் மகத்தான சேவை செய்தனர்’ என்று வாயளவில் பாராட்டி விட்டுப் போனால் போதுமா..? தகுந்த முறையில் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினோமா..? குறைந்தபட்சம் செவி மடுத்துக் கேட்கவேனும் செய்தோமா..?

நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசிரியர் சமூகம் பாதிப்புக்கு உள்ளானதை அங்கீகரித்தோமா..? மாணவர்கள் அளவுக்கு ஆசிரியர்களுக்கும் உளவியல் பிரச்சினை இருந்ததை உணர்ந்தோமா..? அதிலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுபவித்த பிரச்சினைகள் ஏராளம். ஆனால் இவர்களைக் கண்டும் காணாதது போல் கடந்து சென்றோம். ஆசிரியர்களின் தீவிரப் பங்களிப்பு இல்லாமல் மாணவர்களை, கல்வியின் பக்கம் தக்க வைக்க இயலாது என்கிற உண்மை உணரப்படவே இல்லை.

மாணவர்களும் பெற்றோரும் எடுத்துக் கொள்ளும் ‘சுதந்திரம்’ காரணமாக, சாதாரணமாகவே அரசுப் பள்ளி மாணவர்களை சமாளிப்பது சிரமான காரியம். பெருந்தொற்றுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசம் ஆனது. கணிக்க இயலாத அளவுக்குப் பல மாணவர்களின் நடத்தை மாறிப் போய் இருந்தது. அவர்களை வகுப்பறையில் உட்கார வைக்கப் போராட வேண்டி இருந்தது. மாறுபட்ட சூழலில், கல்வியில் ஆர்வம் இல்லாது, ‘வித்தியாசமாக’ நடந்து கொள்ளும் மாணவர்களைக் கையாளும் திறன் எல்லா ஆசிரியர்களுக்கும் வாய்த்து விடவில்லை. பாடம் எடுக்கும் பணியைத் தாண்டி ‘சிறப்புத் திறன்’ தேவைப்பட்டது. அரசும் சமூகமும் இதனைக் கருத்தில் கொள்ளவே இல்லை.

ஒரு ஆச்சரியமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தவறு செய்யும் மாணவர்களைத் திருத்துவதற்குப் பயன்பட்ட ‘பிரம்பு’, ஆசிரியர் கையில் இருந்து பறிக்கப்பட்டது; இது சரியல்ல என்று தொடர்ந்து கூவி வந்தோம். ‘ஏற்கத்தக்க அளவில் கண்டிப்பு, கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே சிறுவரை வகுப்பறையில் தக்க வைக்க இயலும்’ என்று கூறி வந்தோம். நமது நிலைப்பாடு சரிதான் என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

அன்று, பிரம்படிக்கு பயந்து பள்ளிக்கு வந்த பிள்ளைகள் அதிகம்; இன்று, மேலும் ‘சுதந்திரம்’ வேண்டி பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறும் பிள்ளைகள் அநேகம்! இந்த முரண், நமது வாழ்வியல் அடையாளங்களில் ஒன்று. இதனை உணர்ந்து நமது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வருதல் மிக இன்றியமையாதது.

இனி.. பெற்றோர் - அதாவது, பொதுமக்கள். பெருந்தொற்று தொடங்கிய நாளில் இருந்து அடங்கிய நாள் வரை, பல்வகை பாதிப்புகளை சந்தித்த பெற்றோரின் முன்னுரிமைகள் முற்றிலுமாக மாறி விட்டன. பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வெளிவரத் துடிக்கும் இவர்கள், தமது பிள்ளைகளுக்கு ‘நல்ல வாழ்க்கை’ அமைத்துத் தருவதில் கூடுதல் முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, மிக இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படும் பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது.

பத்தாம் வகுப்புக்குப் பின்னர், பனிரெண்டாம் வகுப்பு நிறைவுக்கு முன்னர், கட்டாயத்தால், திருமணத்துக்கு உள்ளான, அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பள்ளிப் பெண்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அரசுதான் இந்தப் பணியைச் செய்ய முடியும். அரசிடம்தான் மக்கள் அச்சமின்றி உண்மையைத் தெரிவிப்பார்கள். அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பகத்தன்மை சற்றும் குறையாமல் நீடித்து வருகிறது. இன்றைய நிலையில் இது மிக நல்ல செய்தி. இதனை சாதகமாகக் கொண்டு, இளம் வயதுத் திருமணத்தைத் தவிர்ப்பதற்கான பிரசாரத்தை அரசு தீவிரமாக, உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு போன்ற முன்னேறிய முற்போக்கு மாநிலத்தில் இளவயதுத் திருமணம் வேர் விடுதல், நீண்டகால நன்மைக்கு ஏற்றதல்ல. பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத வராத தேர்வர்களின் எண்ணிக்கையை சரியான நேரத்தில் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கொள்ளல் வேண்டும். இது தொடர்பாக அரசு, உடனடியாகக் களத்தில் இறங்கித் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்.

பொதுத் தேர்வு எழுத வராத அரை லட்சம் பேரில் சுமார் 70 சதவீதம் பேர், ஆண்கள். இவர்களில் பலர், பெற்றோருக்குத் துணையாக, அமைப்பு சாராத் தொழில்களில் வேலைக்குப் போய்விட்டனர். பொதுத் தேர்வுக்கு முன்பே, தொடர்ந்து பல நாட்களாக பள்ளிக்கே வராதவர்கள். அதாவது இவர்கள் ‘இடை நிற்றோர்’. அபாயகரமான எல்லைகளைத் தொட்டு விட்ட இந்த இடைநிற்றல் – பள்ளிக் கல்வியில், அரசின் முன்னுள்ள மிகப் பெரும் சவால்.

குடும்பத்துக்கு ஆதரவாக, குடும்ப சுமைகளைத் தாங்குபவராக மாறி விட்ட இவ்வகை இளவயதுப் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர, தெளிந்த திட்டமிடல் வேண்டும். இவர்கள் மறுபடியும் கல்வியின் பக்கம் தமது கவனத்தைத் திருப்ப, அதற்கான ‘நட்புச் சூழல்’ உருவாக்கப்பட வேண்டும்.

‘மாணவச் சிறுவர்’ என்கிற நிலையில் இருந்து ‘சம்பாதிக்கும் இளைஞர்’ என்கிற நிலைக்கு ‘முன்னேறி விட்ட’ இவர்களைப் பழையபடி பள்ளிக்குள் ‘திணிப்பது’ இயலாத காரியம். எப்படியும் பனிரெண்டாம் வகுப்புடன் பள்ளிக் கல்வி நிறைவுற்று கல்லூரிக் கல்விக்குத் தகுதி பெற்று விடப் போகிற, உயர்கல்விக்கான நுழைவுவாயிலில் இருக்கிற, ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு, மாலை நேர / பகுதி நேர வகுப்புகள் ஈர்ப்பைத் தரக் கூடும். கூடவே, ஒரு சில பாடங்ளில் இருந்து விலக்கு; குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைத்தல்; இயலுமானால் சில பாடங்களிலேனும், எழுத்துத் தேர்வுகளை வாய்வழித் தேர்வாக மாற்றுதல், வார இறுதி நாட்களில் மட்டும் தேர்வுகள்… உள்ளிட்ட திருத்தங்கள் நல்ல பலன் தரலாம். இதற்கு ஏற்ப இவ்வகைத் தேர்வர்களுக்கு, சிறப்பு சான்றிதழ் வழங்கலாம்.

கல்வியறிவில் மேம்பட்ட நிலையில் உள்ள தமிழ்நாடு, கடந்த சில ஆண்டுகளாக, சரிவை நோக்கிச் செல்வதாக அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை வெறுமனே அரசியல் புகார்களாகப் புறந்தள்ளி விடக் கூடாது என்பதே பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நமக்குப் புகட்டுகிற பாடம்.

குறைகளைக் களைந்து, உற்சாகமான கல்விச் சூழலை உருவாக்குவதில், பெரும் பொறுப்புடன் அரசு செயலாற்ற வேண்டி இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in