

சென்னை: தமிழகத்தில் 18 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பருவத்தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 494 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 7.4 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பருவத்தேர்வு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற 3, 5 மற்றும் 7-வது பருவத்துக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில் 18 கல்லூரிகளின் தேர்வுமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதன் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாதது, விடைத்தாள் திருத்துவதற்காக பல்கலை. வழங்கிய நிதிக்கான கணக்குகளை முறையாக ஒப்படைக்காதது உள்ளிட்ட சில காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
இதுதொடர்பாக அண்ணா பல்கலை. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கணிசமான கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்களை அனுப்புவதில்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், சில கல்லூரிகள் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நிதி குறித்த செலவீன கணக்கை ஒப்படைக்காததால் கணக்கு தணிக்கையில் பல்கலை.க்கு பிரச்சினை வருகிறது. இதன்காரணமாகவே 18 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன என்றனர்.
இந்நிலையில் உயர்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம்: விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ஆசிரியர்களை அனுப்ப மறுப்பு, ஏற்கெனவே 4 பருவத் தேர்வுகளுக்கு வழங்கப்பட்ட முன் பணத்துக்கு சரியாக கணக்கு தராதது ஆகிய காரணங்களால் 18 தனியார் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன.
தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி 18 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். கல்லூரிகள் செய்த தவறுக்கு அதன்நிர்வாகங்களின் மீது நடவடிக்கைஎடுக்க அண்ணா பல்கலை.க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.