Published : 15 Mar 2023 07:01 AM
Last Updated : 15 Mar 2023 07:01 AM

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறையின் தலைவருமான வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித்தேர்வு நிறுவனம், ஆர்ஆர்பி ஆகிய தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியிலும் ( 500 இடங்கள்), நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும் ( 300 இடங்கள்) நடத்தப்படுகின்றன.

போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெறும். பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பயிற்சியில் சேர விரும்புவோர் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் (www.civilservicecoaching.com) வாயிலாக மார்ச் 15 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7373532999, 9894541118, 8667276684 மற்றும் 8489334419 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு. தேர்வர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் 10-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x