

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் ‘வாக்கரூ’ இணைந்து சென்னை மாவட்டத்தில் நடத்திய வண்ணம் தீட்டுதல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
குழந்தைகள் மத்தியில் நடைப்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி அவர்களை தினமும் நடக்கப் பழக்கப்படுத்தும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் வாக்கரூ இணைந்து ‘நடந்தால் நன்மையே நடக்கும்’ என்ற பள்ளிக் குழந்தைகளுக்கான நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வு போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் சென்னைமாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
3, 4, 5-ம் வகுப்புகளுக்கு வண்ணம் தீட்டுதல் போட்டியும், 6, 7,8-ம் வகுப்புகளுக்கு ஜூனியர் கட்டுரைப் போட்டியாக, `நடைப்பயிற்சியின் நன்மைகள்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 9-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்பு வரையிலானவர்களுக்கு சீனியர் கட்டுரைப் போட்டியாக `நம்வாழ்க்கை முறைகளில் நடையின் பங்கும் பயனும்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த 9 மாணவிகளுக்கு சனிக்கிழமை அன்று வேப்பேரி ஒய்எம்சிஏ ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.