

மதுரை: காமராசர் பல்கலைகழகத்தில் சிண்டிக்கேட், செனட், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சுமார் 13 ஆண்டுக்கு பிறகு நாளை நடக்கிறது.
காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் 3 சிண்டிகேட், 5 செனட், 6 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள முவ.அரங்கில் நாளைமறுநாள் (மார்ச் 3) நடக்கிறது. மூட்டா, மூபா, கல்லுாரி ஆசிரியர், முதல்வர்கள், நிர்வாக அலுவலர்கள் என ஒருங்கிணைந்த சங்கங்கள் சார்பில், சிண்டிகேட் உறுப்பினர் பதவிக்கு சண்முகவேல், தவமணி கிறிஸ்டோபர், புஷ்பராஜ் ஆகியோரும், செனட் உறுப்பினர் பதவிக்கு கோபி, பிரபகாரன், சுல்தான் இப்ராஹிம் மற்றும் நிலைக்குழுவிற்கு பகவதியப்பன், சிபு, செல்வி, இமயவரம்பன் ஆகியோர் ஓரணியாக போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து பேராசிரியர்கள் குழு சார்பில், சிண்டிகேட் பதவிக்கு முன்னாள் பதிவாளர் வசந்தாவும், மதுரை கல்லூரி பேராசிரியர் (முன்னாள் சிண்டிகேட்) தீனதயாளனும், செனட்டிற்கு சுமதி, உதயகுமார், ஜெயசந்திரன், குருமூர்த்தி மற்றும் நிலைக்குழுவிற்கு வெங்கடாசலம், கணேஷ், அசோகன் ஆகியோர் மற்றொரு அணியாக களம் இறங்க தயாராகியுள்ளனர். இவர்கள் தவிர, பேராசிரியர்கள் மோகன், பொன்ராம் ஆகியோர் தனியே போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு கல்விப் பேரவை உறுப்பினர்கள் சுமார் 135 பேர் வாக்களிக்கவேண்டும். ஒவ்வொருவரும் 14 ஓட்டுக்கள் பதிவிடவேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியாக பல்கலைக்கழக பதிவாளர் சதாசிவம் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு அணியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கல்விப் பேரவையில் இருந்து சிண்டிகேட் உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் இத்தேர்தல் 13 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.