

சென்னை: தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று (மார்ச் 1) தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளன.
மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 95 ஆயிரம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தேர்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து வரும் 9-ம் தேதிக்குள் தேர்வை நடத்த வேண்டும். ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிப்பதுடன், தேர்வுத் துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.
ஆட்சியர் ஆலோசனை: இதற்கிடையே பொதுத்தேர்வு நடத்துதல் சார்ந்த ஆயத்தக் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காவல், வருவாய், மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், தீயணைப்பு மீட்புப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியர் சு.அமிர்தஜோதி அறிவுறுத்தல் வழங்கினார். இந்த கூட்டத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.