

கோவை: கோவை அவிநாசி சாலையில் ஜிடி நாயுடு அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்பிரிமெண்டா’ எனும் அறிவியல் மையத்தை தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திறந்து வைத்தார்.
விழாவில், ஜி.டி.நாயுடு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால், அறங்காவலர்கள் ஜி.டி.ராஜ்குமார், அகிலா சண்முகம், சென்னையில் உள்ள ஜெர்மன் துணைத்தூதரக அதிகாரி மைக்கேலா குச்லேர், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், கோவை பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தி, எளிமையாக கற்றுக்கொள்ள வைக்கும் நோக்கில் 40,000 சதுர அடி பரப்பளவில் இந்த அறிவியல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 120 அறிவியல் செய்முறை மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையத்தை இன்று (மார்ச் 1) காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.
திங்கள் கிழமைகள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் திறந்திருக்கும். அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.