

புதுடெல்லி: குறைந்தது 6 வயதாகும் குழந்தைகளையே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தேசிய கல்விக் கொள்கையில் 3 வயது முதல் 8 வயது வரை குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pre-KG, LKG, UKG, முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய 5 ஆண்டு கால கல்வியே அடிப்படைக் கல்விக்கான காலமாக அதில் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச வயதாக 6 வயது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்கம் அறிவுறுத்தி இருப்பதாக மத்திய கல்வி அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.