

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்புவரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 20 முதல் ஏப்.20-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அதே கல்வியாண்டிலேயே இரு தவணைகளாக அரசு வழங்க வேண்டும். ஆனால்,கடந்த 2 ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணத்தை அரசு இன்னும் வழங்கவில்லை.
இந்த சூழலில் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை தயாராகி வருவது அதிர்ச்சி தருகிறது. ஏற்கெனவே தனியார் பள்ளிகள் பல்வேறு பொருளாதார நிதி நெருக்கடிகளில் தவித்து வருவதால் ஆர்டிஇகல்விக் கட்டண நிலுவையை தமிழகஅரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையெனில் 25 சதவீத இலவச சேர்க்கையை பள்ளிகளில் தொடர்வது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.