

சென்னை: இல்லம் தேடி கல்வி மையங்களில் பயிலும் மாணவர்கள் கற்பனை திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் குறும்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக் கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பின்கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
சிட்டுக்களின் குறும்படம்
இந்நிலையில் இல்லம் தேடி கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்பனை, படைப்பாற்றல், சிந்தனைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் இல்லம் தேடி கல்வி மையங்களில் 'சிட்டுக்களின் குறும்படம்' எனும் நிகழ்வு தற்போது நடத்தப்பட உள்ளது. அதன்படி சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, எனக்கு பிடித்தவை, தன் சுத்தம் ஆகிய 5 தலைப்புகளில் மாணவர்கள் 3 நிமிட குறும்படங்களை தயார்செய்யலாம். இதற்கான கதை களத்தை மாணவர்களே தயார்செய்ய வேண்டும்.
செல்போனில் படம்
கதை களத்துக்கான காட்சிகளை செல்போன் உதவியுடன் படம்பிடித்து அதை தன்னார்வலர்கள் உதவியுடன்,வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரும் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
ஒருமையம் ஒரு குறும்படத்தை மட்டுமே தயார் செய்து அனுப்ப வேண்டும். வட்டார வள மைய அதிகாரிகள் கதையமைப்பு, ஒளிப்பதிவு, கதாபாத்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 10 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு, வட்டார அளவில் 5 தலைப்புகளின்கீழ் 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அதிலிருந்து 5 சிறந்த குறும்படங்களை மாவட்ட அளவில் தேர்வு செய்து, மாநில அலுவலகத்துக்கு மார்ச் 3-ம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.