

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மூலக்கடை கிராமத்தில் வசித்து வருபவர் ராமசாமி. கல் உடைக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி மலர். இவர்களது மகள் சந்தியா, மகன் இளங்கோவன்.
இதில், சந்தியா மூலனூர் என்.சி.க.வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்ஸி படித்து தேர்ச்சி பெற்றார். அதன்பின் மேற்படிப்புக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளங்கோவன் இதே அரசுப் பள்ளியில் எஸ்எஸ்எல்ஸி படித்து வருகிறார். தனது வீடு தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக சக மாணவர்கள், ஆசிரிய, ஆசிரியைகளிடம் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த பள்ளித் தலைமையாசிரியர் திருமுருகன், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, ராமசாமியின் குடும்பத் துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க நிதி திரட்டினர். அதேபோல மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் திரட்டப்பட்ட ரூ.18 ஆயிரம், வீட்டுக்கு தேவையான ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சமையல் அடுப்பு உள்ளிட்ட பொருட்களை பள்ளி தரப்பில் ஆசிரியைகள் ரேவதி, வீணா, உஷா ஆகியோர் ராமசாமியிடம் வழங்கினர்.
தொடர்ந்து சமூக வலை தளங்களில் இந்த செய்தி வைரலான நிலையில் ராமசாமி, மலர் தம்பதிக்கு வீடு கட்டத் தேவையான நிதி திரட்டப்படுமென ஆசிரியர்கள் தெரிவித்தனர்.