

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரம சிங்கபுரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் கடந்த மாதம் 5-ம் தேதி திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் கூலி வேலை செய்து வருகிறேன். எனது மகன் பொன்முருகன் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவரது அசல் கல்வி சான்றிதழ் கிடைக்கும் முன்னரே சங்கர் நகரிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்தார்.
அப்போது ரூ.20 ஆயிரம் வங்கி வரை வோலையை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்குமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதன்படி ரூ.20 ஆயிரம் வங்கி வரைவோலையுடன் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் பொன்முருகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதால் பாலி டெக்னிக்கில் சேர்ந்து மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
இதனால் கல்லூரியில் செலுத்திய ரூ.20 ஆயிரத்தை திருப்பிக் கேட்டபோது, வங்கி கணக்கில் வரவு வைத்துவிடுவதாக கூறி காலம் கடத்தி வந்தனர். விண்ணப்பத்துடன் செலுத்திய தொகையை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்தனர். அந்த பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ச. சமீனா, கல்லூரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை அடுத்து ரூ.20 ஆயிரத்தை வழங்க கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டது.