கேந்திரிய பள்ளிக்கு இடமளித்ததால் உடுமலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் இடநெருக்கடியில் தவிப்பதாக புகார்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உடுமலை: உடுமலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இடமளித்ததால், அரசுப் பள்ளி மாணவர்கள் இடமின்றி தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

உடுமலை ராஜேந்திரா சாலையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 9 கட்டிடங்களைக் கொண்ட இப்பள்ளியில் 20 வகுப்பறைகள் உள்ளன. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் இப்பள்ளிக்கு சொந்தமான 14 வகுப்பறைகள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்காக ஒதுக்கப்பட்டன. அப்போது முதல் 4 ஆண்டுகளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனால், அரசுப்பள்ளி மாணவர்கள் இடநெருக்கடியில் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இடவசதி இல்லாததால், தற்காலிக அடிப்படையிலேயே அரசுப் பள்ளிக்கு சொந்தமான வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டன. 4 ஆண்டுகள் ஆகியும் இப்பள்ளிக் கென சொந்த இடமோ, கட்டிடமோ கட்டப்படவில்லை. அரசுப் பள்ளி மாணவர்கள் எஞ்சிய 6வகுப்பறைகளில் கடும் இடநெருக்கடியில் பயிலும் சூழல் உள்ளது.

இதற்கிடையே வட்டார கல்வி அலுவலகத்துக் கென சிலவகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களுக்காக தமிழக அரசு பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கும், கல்வி அலுவலர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in