புதுமைப் பெண் திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் சேலம் முதலிடம்: மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக புதுமைப் பெண் திட்டத்தின் 2-வது கட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டு, புதுமைப் பெண் பெட்டகப் பைகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். (அடுத்தபடம்) நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி அட்டையை மாணவிக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் பி.கீதா.
முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக புதுமைப் பெண் திட்டத்தின் 2-வது கட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டு, புதுமைப் பெண் பெட்டகப் பைகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். (அடுத்தபடம்) நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி அட்டையை மாணவிக்கு, ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் பி.கீதா.
Updated on
1 min read

சேலம்: புதுமைப் பெண் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது, என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் 2-வது கட்டத்தை, திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம், சேலம் மாவட்டத்தில் 6,090 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டு, புதுமைப் பெண் பெட்டகப் பைகளை வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 8,016 பேர் பயன் பெற்றுள்ளனர். 2-வது கட்டத்தில் 6,090 பேர் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

பெண் கல்விக்காக எந்தப் பெற்றோரும் பொருளாதார ரீதியில் சுமையாகக் கருதக்கூடாது என்பதற்காகவும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டும் புதுமைப் பெண் திட்டம் 2-வது கட்டமாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் 3,694 மாணவிகள்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக உயர்கல்வி பயிலும் 3,694 மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 50 மாணவிகளுக்கு உதவித் தொகை பெறும் வங்கி அட்டையை ஆட்சியர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

இதுதொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 6,525 மாணவிகளுக்கும், 2-ம் கட்டமாக 3,694 மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன” என்றனர். மாவட்ட சமூக நல அலுவலர் பி.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு புதுமைப் பெண் திட்டம் 2-வது கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in