

சென்னை: சென்னை ஐஐடி 'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு' என்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட, சமூக மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், முழுத் திறனுடன் செயலாற்றவும், தேசத்தைக் கட்டியெழுப்பி உலகளவிலான தாக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கவும் ஆழ்ந்த, அனுபவமிக்க, வேடிக்கையான செயலாக்கங்களை உருவாக்குவதுதான் இந்த சிறு பாடத்திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) 'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு' (Personal and Professional Development) என்ற சிறிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இளங்கலை மாணவர் ஒருவர் பாடத்திட்டத்தில் தகுதிபெற ஏராளமான பாடங்களை எடுக்க வேண்டிய அவசியம் இருந்து வருகிறது.
மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள்/ செயலாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. 'தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு' என்ற சிறிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு ஐஐடி மெட்ராஸ் செனட் அண்மையில் ஒப்புதல் அளித்தது. மாணவர்களின் கலாச்சாரம், திறமை, தலைமைத்துவத்தை மாற்றி அமைப்பதுடன் முழுமையான வளர்ச்சியை அடைவதற்கான இக்கல்வி நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறிய பாடத்திட்டம் அமையும்.
அனைத்து பி.டெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் இந்த பாடத்திட்டத்தில் சேரலாம். ஐஐடிஎம்-ல் படிக்கும் அனைத்து மாணவர்களும் அவர்கள் எந்தப் பாடத்திட்டத்தை எடுத்துப் படித்து வந்தாலும் இதனை விருப்பப் பாடமாக மேற்கொள்ளலாம்.
இத்தகைய படிப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "சுய கண்டுபிடிப்பு, சுய விழிப்புணர்வு, சுய தலைமைத்துவம், சுய தேர்ச்சி போன்றவற்றின் மூலம் ஒருவரின் முழுத் திறனையும் செயல்படுத்தி உள் (மனித) தூண்டுதலை நிறைவுசெய்ய தனிப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் உதவுகின்றன. குறிப்பாக நமது இளைஞர்களின் மனங்களை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் வகையில் இத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். நமது மாணவர்கள் பல்வேறு தொழில் விருப்பங்களை நிறைவேற்றும் நோக்குடன் தனிப்பட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க தொழில்முறை பாடத்திட்டங்கள் உதவுகின்றன" என்றார்.