ஜேஇஇ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்
சென்னை: நாடு முழுவதும் 8.24 லட்சம் பேர் எழுதிய ஜேஇஇ முதன்மை தேர்வு தாள் 1-க்கான முடிவு வெளியிடப்பட்டது. இதில் 20 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஜேஇஇ முதன்மை தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24, 25, 29, 30, 31-ம் தேதிகளில் நடந்தது. இதேபோல, கடந்த ஜன.28-ம் தேதி பி.ஆர்க்., பி.பிளானிங். (தாள்-2ஏ, 2பி) போன்ற படிப்புகளுக்கான தேர்வும், கடந்த பிப்.1-ம் தேதி பி.இ., பி.டெக். (தாள்-1) படிப்புகளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
8.24 லட்சம் பேர் தேர்வெழுதினர்: இத்தேர்வுகளை எழுத 6.03 லட்சம் மாணவர்கள், 2.56 லட்சம் மாணவிகள், 3 திருநங்கைகள் என மொத்தம் 8.60 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இந்தியாவில் 290 நகரங்கள், வெளிநாடுகளில் 18 நகரங்களில் நடந்த இத்தேர்வை 8.24 லட்சம் பேர் எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஜேஇஇ முதன்மை தேர்வு தாள் 1-க்கான முடிவை என்டிஏ நேற்று வெளியிட்டது. அதன்படி, அபினத் மெஜட்டி, அமோக் ஜலான், அபூர்வா சமோதா, அஷிக் ஸ்டென்னி, பிக்கினா அபினவ் சவுத்ரி உட்பட 20 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்தபட்டியலில் மாணவிகள் இடம் பெறவில்லை.
மாணவிகள் தரவரிசையில் மீசலா பிரணதி ஜா 99.99 சதவீத மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். ரமிரெட்டி மேக்னா, மேதா பவானி கிரிஷ் ஆகியோரும் 99.99 சதவீத மதிப்பெண் பெற்றுள் ளனர்.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான தாள்-1 தேர்வு முடிவு மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. பி.ஆர்க்., பி.பிளானிங். ஆகிய படிப்புகளுக்கான தாள் 2ஏ, 2பி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
இதற்கிடையே, அடுத்ததாக 2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவுjeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இத்தேர்வுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 6, 8, 10, 11, 12, 13, 15-ம்தேதிகளில் தேர்வு நடைபெறும்.
