

கோவை: சர்வதேச விண்கற்கள் கண்டறிதல் ஆய்வு பணியில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பு புதிய விண்கற்களைக் கண்டறியும் ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. விண்கற்கள் கண்டறிதல் குறித்த ஆய்வுத்திட்டம் அமெரிக்கநாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் உதவியோடு குடிமகன் அறிவியல் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் வானியல் நிறுவனம் பிரத்யேக தொலைநோக்கி மூலம் ஆண்டு முழுவதும் இரவு நேரங்களில் வானில் படங்களை எடுத்து வருகிறது. இப்படிஎடுக்கப்படும் படங்களை கொண்டுஒரு பிரத்யேக மென்பொருள் உதவியுடன் விண்கற்களை கண்டறிவது ஆய்வில் பங்கேற்கும் மாணவர்களின் பணியாகும்.
இந்த ஆய்வுப் பணிக்கு கோவை எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் எம்.சிவரஞ்சனியின் வழிகாட்டுதல் படி, கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தலைமையிலான குழுவில் என்.சாஜிதா,எஸ்.தாரணி, எஸ்.பவதாரணி,எஸ்.காவ்யா, ஆர்.திருநாவுக்கரசு,கே.எப். வேலண்டினா ஆகியோர் பங்கேற்று புதிய விண்கற்களை கண்டறிந்தனர்.
கோவையில் இருந்தபடி பிரத்யேக செயலி மூலம் இந்த ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. புதிய விண்கற்களை கண்டறிந்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் போ.சுப்பிரமணி பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் இயற்பியல் துறைத்தலைவர் க.லெனின்பாரதி, உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் புருசோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.