

சென்னை: தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (ஏயுடி) 75-வது ஆண்டு பவளவிழா கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட ‘பேராசிரியர் செந்தாமரை’ நினைவு இல்லத்தை திறந்து வைத்து, பவளவிழா மலரை வெளியிட்டார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. சேர்க்கையில் மட்டுமல்லாமல், கல்வி தரத்திலும் உயர வேண்டும். காமராஜரின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கல்வி உயர்ந்தது. அதன்பிறகு, கருணாநிதி ஆட்சியில் உயர்கல்வி மேம்பட்டது.
தற்போதைய திமுக ஆட்சி, உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என்பதே முதல்வர் ஸ்டாலினின் ஆசை. அதை நிறைவேற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.